யாழ் மாநகரசபையில் ஆதரவளிக்குமாறு முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். கூட்டமைப்பினர் சிலர் பேச்சுவார்த்தைக்கும் முயன்றனர். ஆனால் அந்த கோரிக்கைகளை எழுத்துமூலம் சமர்ப்பியுங்கள் என கூறிவிட்டேன் என தெரிவித்துள்ளார் ஈ.பி.டி.பி அமைப்பின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா.
நேற்று (18) யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
யாழ் மாநகரசபையில் எமது ஆதரவை கோரி கூட்டமைப்பு தரப்பிலிருந்து ஒரு தொலைபேசி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. என்னுடைய ஆட்கள் மூலம், என்னுடன் பேசுவதற்கும் கோரிக்கை வைத்திருந்தார்கள். எழுத்துமூலம் அந்த கோரிக்கை முன்வைத்தால் அதனை பரிசீலிக்கலாமென நான் சொல்லியிருந்தேன்.
ஏனெனில், கடந்த முறை மாவை சேனாதிராசாவும், சுமந்திரனும் தொலைபேசியில் தொடர்புகொண்டு மாநகரசபையில் ஆதரவளிக்க கோரிக்கை விடுத்திருந்தனர். பின்னர், ஊடகங்களிடம் பேசும்போது, அதை மறுத்திருந்தனர். தாம் ஆதரவு கேட்கவில்லை, ஈ.பி.டி.பி தமது தேவைக்காக ஆதரித்து வாக்களித்தது என சொன்னார்கள்.
அதனால், இம்முறை ஆதரவு கேட்டபோது, எழுத்துமூலம் கோரிக்கை வைக்கும்படி சொல்லியிருந்தேன்.
ஆனால், வாக்களிப்பில் அன்று முன்னாள் மேயர் ஆனல்ட், தமக்கு ஆதரவளிக்க கேட்டு ஒரு தொலைபேசி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். நான் அதனை பார்க்க பிந்தி விட்டது. அதனால், காலம் கடந்து விட்டது என பதிலளித்தேன்.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், செயலாளர் மாவை போன்றவர்கள்தான் அந்த பேச்சை நடத்த வேண்டும். அவர்கள் அதை செய்யாமலிருக்கிறார்கள். அவர்கள் ஆனல்ட் பதவிக்கு வருவதை விரும்பாமலிருக்கலாம் என்றார்.
No comments:
Post a Comment