உங்கள் கட்சியின் தாபகத் தலைவர் அஷ்ரப் அவர்களின் அகால மறைவுக்கு பிறகு தலைமைத்துவத்தை நீங்கள் பொறுப்பேற்று 20 வருடங்கள் நிறைவு இரு மாதங்களுக்கு முன்னர்தான் கடந்துபோனது. நீங்கள் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரானதற்கு பிறகு பதவிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கத்திலும் அமைச்சராக பதவி வகித்து வந்திருக்கிறீர்கள். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தில் தான் நீங்கள் அமைச்சராக இல்லை.
உங்களைக் கைவிட்டு விட்டு அரசியலமைப்புக்கான 20 வது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட இன்னமும் ஏதாவது ஒரு அமைச்சை பெற்றதாக இல்லை. அவர்களுக்கு அமைச்சர் பதவியை கொடுக்கவேண்டிய அவசரமோ ராஜபக்சக்களுக்கு இப்போது கிடையாது. எதிர்பார்த்துப் போனதற்கு அவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம் போல் தெரிகிறது.
முன்னர் நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் மாறிமாறி அமைக்கும் அரசாங்கங்களில் முக்கியமான அமைச்சராக இடைவிடாது பதவி வகித்தீர்கள். இப்போது அந்த இரு பிரதான கட்சிகளும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அரசியல் சக்திகளாக இல்லை. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரினால் கூட ஒரு ஆசனத்தை பெறமுடியவில்லை. கிடைத்த ஒரு தேசிய பட்டியல் எம்.பி.பதவியையும் இன்னமும் நிரப்பமுடியாமல் தடுமாறுகிறீர்கள்.
அதனால், நாட்டின் ஒரேயொரு பெரிய கட்சியாக விளங்கும் ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தான் நீங்கள் சகவாசத்தை செய்வதற்கு வழிமுறைகளை கண்டறியவேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களால் எதிரணி அரசியலை செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கும். ஏனென்றால், ஆளும் அணியுடன் எப்போதுமே கூட்டுச் சேர்ந்து அமைச்சராக பதவி வகித்து பழக்கப்பட்டவர் நீங்கள். உங்களைப் போன்றே மறுபுறத்தில் எமது முக்கிய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களினாலும் எதிரணி / மோதல் அரசியலை கைவிட்டு இணக்கப்போக்கு அரசியலுக்கு செல்லமுடியாமல் இருக்கிறது.
உங்களைப் போன்றதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனின் நிலையும், அவரது கட்சியின் உறுப்பினர்களும் தலைவரைக்கை விட்டு 20 திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியின் பதுளை மாவடட உறுப்பினர் அரவிந்த குமாரும் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.
இவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று தலைவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆனால், இந்த கட்சிமாறிகளில் பெரும்பாலானவர்கள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் சமகி பல ஜனவேகயவின் வேட்பாளர்களாகவே தேர்தலில் போட்டியிட்டார்கள். அதனால், சிக்கல் ஏற்படக்கூடும்.
அதுபோக, முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரையில் ' கிளர்ச்சிக்காரர்கள ' பெரும்பான்மையானவர்கள். அதனாலும் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் சிக்கல் வரலாம். இந்த சிக்கல்களில் இருந்து நீங்கள் விடுபடுவது பெரும் கஷ்டமானதாக இருக்கும்.
தலைமைத்துவத்தை உறுப்பினர்கள் மதிக்காமல் செயற்படுகின்ற போக்கு இன்று சகல கட்சிகளுக்குள்ளும் ஊறிப்போயிருக்கிறது. உறுப்பினர்கள் தங்கள் மனம் போனபோக்கில் ஊடகங்களுக்கு கருத்துக்களைக் கூறுகிார்கள். கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு எத்தகையது என்பது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அதேவேளை, அவ்வாறு பொறுப்பில்லாமல் பேசுபவர்களை தலைவர்கள் தட்டிக்கேட்பதும் கிடையாது. இவ்வாறான உட்கட்சி அராஜகம் ஆளும் பொதுஜன பெரமுனவுக்குள் மாத்திரமே இல்லை.
ராஜபக்சாக்களின் நிலைப்பாடுகளை மீறி எவரும் அங்கு கருத்துக் கூறுவது அரிதிலும் அரிது. உறுதியான தலைமைத்துவம் இல்லாத கட்சிகள் எலலாம் சீரழிந்துபோய்க் கிடப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக சரியான தலைமைத்துவம் இல்லாத காரணத்தால் அதற்கு இன்று ஏற்பட்டிருக்கும் பரிதாப நிலையை பாருங்கள். பெரு முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவபடுத்துவதாக ஒரு காலத்தில் அடையாளப்படுத்தப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை அலுவலகமான ஸ்ரீகோத்தாவின் ஊழியர்களுக்கு மாதச்சம்பளம் வழங்குவதற்கு கூட நிதியில்லாத அளவுக்கு வங்குரோத்தாகிவிட்டது. இறுதியில் மானத்தைக் காப்பாற்ற தலைவர் விக்கிரமசிங்க தனது சொந்தப்பணத்தில் 3 மில்லியன் ரூபாவை கொடுக்கவேண்டியதாயிற்று.
உங்கள் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸின் எம்பி.க்கள் பாராளுமன்றத்தக்கு சென்றீர்கள். இப்போது அவர்களில் நான்கு பேர் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு உங்களை விட்டு வேறாக நிற்கிறார்கள். அவர்களை கட்சியில் இருந்து விலக்கும் விவகாரத்தில் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறீர்கள். இதை நிதானமாகக் கையாளாவிட்டால் உங்கள் கட்சி ஒரு எம்.பி.யை கொண்டதாக சபைக்குள் தனியனாக நிற்கவேண்டிவரும்.
நீங்கள் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக வந்த நாள் தொடக்கம் தலைமைத்மைத்துவத்தக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கு அடிக்கடி முகங்கொடுத்து வந்திருக்கிறீர்கள். தற்போது தோன்றியிருக்கும் கிளர்ச்சியையும் முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் போலும். அவர்களுடன் நீங்கள் இன்னமும் வெளிப்படையாக பகைமை காட்டவில்லை. அது உங்களுக்கே உரிய அணுகுமுறை.
இறுதியாக, உங்களுக்கு ஒருவிடயத்தை நினைவுபடுத்தாமல் கடிதத்தை நிறைவுசெய்ய மனம் வரவில்லை.
மகிந்த ராஜபக்சவின் இண்டாவது பதவிக்காலத்தின்போது அரசியலமைப்புக்கான 18 வது திருத்தத்தை நீங்களும் ரிஷாத் பதியுதீனும் ஆதரித்திருக்காவிட்டால், அது பாராளுமன்றத்தில் நிறைவேறியிருக்கமாட்டாது. உங்கள் அரசியல் வரலாற்றில் நீங்கள் செய்திருக்கக்கூடிய பெரியதவறு அதுவாகவே இருக்கமுடியும். அதற்கு பிராயச்சித்தமாக இத்தடவை 20வது திருத்தத்தை எதிர்த்து வாக்களித்திருக்கிறீர்கள் போலும். என்றாலும் அதே தவறை உங்கள் கட்சியின் எம்.பி.க்கள் பத்து வருடங்களுக்கு பிறகு செய்ததை தடுக்கமுடியாமல் போய்விட்டது. வரலாற்றில் இருந்து பாடம் படிக்காதவர்களை வரலாறு ஒரு நாள் நிச்சயம் தண்டிக்கும்.
இப்படிக்கு
ஊர்சுற்றி
No comments:
Post a Comment