ரஜினிகாந்தை அரசியல் ரீதியாக விமர்சித்த போது கடும் சொற்களை பயன்படுத்தியது காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், மதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களும் அவரது குடும்பத்தினரும் கருதுவது போல அவரது உடல்நலன், மனஅமைதி முதன்மையானது.
இதனை ஏற்கனவே நானும் பலமுறை பதிவு செய்திருந்தேன். கடந்த காலங்களில் அவர் மீது பெருமதிப்பு வைத்திருந்த ரசிகர்களில் ஒருவன் நான்; ஆனால் அரசியல் ரீதியாக வரும்போது கடும் விமர்சனங்களை கடும் சொற்களை பயன்படுத்தி இருக்கலாம்.
அது அவரையோ அவரது குடும்பத்தினரையோ ரசிகர்களையோ காயப்படுத்தியிருந்தால் நான் பெரிதும் வருந்துகிறேன். இனி எப்போதும் அவர் எங்கள் புகழ்ச்சிக்குரியவர். ஐயா ரஜினிகாந்த் அவர்கள் ஆகப்பெரும் திரைஆளுமை அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
ஆசிய கண்டம் முழுமைக்கும் அவர் புகழ் வெளிச்சம் பரவிக்கிடக்கிறது. தமிழர்கள் அவரைப் பெரிதும் கொண்டாடுகிறார்கள். நாம் தமிழர் பிள்ளைகளும் இனி அவரைக் கொண்டாடுவோம். அரசியல் அவருக்கு அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எதிர்த்ததனால் அவர் இம்முடிவை எடுத்துள்ளார் என்று சொல்லமுடியாது.
ஆனால் எப்படி பார்த்தாலும் அவரது முடிவு வரவேற்கத்தக்கது; மனதார பாராட்டுகிறேன். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகளில் நாம் தமிழர் உறவுகள் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். நான் போட்டியிடவிருக்கும் தொகுதியை மரியாதைக்குரிய ஐயா ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும்.
அவர் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்தத் தொகுதியில் நானும் போட்டியிடவிருக்கிறேன். இனி திமுகவுக்கு மாற்று அதிமுக அல்ல; திமுக-வுக்கு மாற்று நாம் தமிழர் தான் என்பதை உருவாக்குவோம்! திமுகவா? நாம் தமிழரா? திராவிடரா தமிழரா என்று மோதிப் பார்த்துவிடுவோம்! என சீமான் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment