கனடா பிராம்டன் நகரசபையில் முள்ளிவாய்க்கால் தூபி அமைப்பதற்கு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழ் மக்களின் நினைவுத்தூபி சமீபத்தில் இடித்தழிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, கனடாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றான பிராம்டன் நகரின் நகரசபையில், பீல் பிராந்திய மற்றும் பிராம்டன் நகரசபை வட்டாரம் 3 மற்றும் 4 இன மக்கள் பிரதிநிதி மாட்டின் மெடுரசினால் கொண்டு வரப்பட்ட பிராம்டன் நகரசபைக் காணியில், தமிழ் மக்களுக்கான நினைவுத்தூபி அமைக்கும் தீர்மானம் ஏகமனதாக ஜனவரி 20ஆம் நாள் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் மக்களால் செல்வாக்குச் செலுத்தக்கூடிய உலகின் திசையெங்கும், சாத்தியமான அனைத்து வழிகளிலும் தமிழினவழிப்பு நினைவு கூரப்படவேண்டும்.
யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட போது, உடனடியாக தனது டுவிட்டர் பக்கத்தில், அச்சம்பவம் தமிழ் மக்களின் இனப்படுகொலை வரலாற்றை அழித்தொழிக்கும் முயற்சி எனத் தனது கண்டனத்தை மாட்டின் வெளியிட்டிருந்தமை இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.
நடந்து முடிந்த இனவழிப்பிற்கான பரிகார நீதியாகவும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்கவும்,"பொது வாக்கெடுப்பு மூலமான அரசியல் தீர்வு வேண்டும்" என்ற கோரிக்கை உலகெங்கிலும் இருந்து பலமாக மேலெழவேண்டிய காலம் இது.மக்கள் சக்தியே மாபெரும் சக்தி. ஒன்று விழ ஓராயிரமாய் எழுந்தால் வீழும் தொடர்கதை முடியும்.
ஆகவே இனவழிப்பிற்குள்ளான தமிழ் மக்களுக்கான நினைவுத்தூபி கனடாவின் பிராம்டன் நகரில் அமையவிருக்கிறது.
பிராம்டன் நகரின் வளர்ச்சிக்கு வணிகம், கலை, கலாச்சார ரீதியாகத் தமிழ் மக்கள் வழங்கி வரும் பெரும் பங்கை நினைவு கூர்ந்த மாட்டின், இந்த நினைவுத்தூபியை அமைப்பதன் மூலம் தமிழ்க் கலாச்சாரத்தைப் பெருமைப்படுத்துவது மட்டுமன்றி அவர்களின் வரலாற்றையும் பதிவு செய்வதாக அமையும் என மேலும் கூறியுள்ளார்.
நினைவுத்தூபி அமைப்பதற்கான தொடர்ந்த முன்னெடுப்புகள் கனடிய தமிழ் மக்களின் முழுமையான பங்களிப்புடன் பிராம்டன் தமிழ் ஒன்றியம் மற்றும் பிராம்டன் முதியோர் ஒன்றியத்தின் ஒன்றிணைந்த முயற்சியாக சிறந்த முறையில் செயல்வடிவம் பெறும் என இம்முயற்சியுடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரம் மேலும் அறியத்தந்துள்ளது.
No comments:
Post a Comment