அழிக்கபட்ட ஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் NILANTHAN - TamilnaathaM

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, January 23, 2021

அழிக்கபட்ட ஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் NILANTHAN

கடந்த கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் சின்னம் உடைக்கப்பட்டமை நன்மையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.முதலாவது நன்மை தூங்கிக் கிடந்த பல்கலைக்கழகத்தை அது துடித்தெழ வைத்திருக்கிறது.யாழ் பல்கலைக்கழகம் கடந்த பத்தாண்டுகளில் பல போராட்டங்களை முன்னெடுத்துதிருக்கிறது.எனினும் பெரும்பாலான அரசியல் போராட்டங்களில் அது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.அல்லது இடைக்கால வாக்குறுதிகள் மூலம் போராட்டங்கள் பிசுபிசுத்துப் போயின. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் இது ஒரு வெற்றி பெற்ற போராட்டம். ஏனெனில் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு நிர்வாகம் பணிந்திருக்கிறது. இது முதலாவது நன்மை. அதாவது நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டது பல்கலைக்கழக மாணவர்களையும் தமிழ் மக்களையும் துடித்தெழ வைத்திருக்கிறது.


இரண்டாவது நன்மை-அது உலகப் பரப்பில் உள்ள தமிழ் மக்களை ஓன்று திரட்டியுள்ளது. தமிழகத்தையும் தமிழ் புலம்பெயர்ந்த சமூகங்களையும் அது ஒரு உணர்ச்சிப் புள்ளியில் ஒன்றிணைத்திருக்கிறது.


மூன்றாவது நன்மை- தமிழ் முஸ்லிம் சமூகங்களை இணைத்திருக்கிறது. இந்த விடயத்தில் வடக்கு-கிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இணைந்து போராடியமை ஒரு முக்கியமான முன்னேற்றம்.


நாலாவது நன்மை-யாழ்.பல்கலைக்கழகத்தை நோக்கி முழு உலகத்தின் கவனத்தையும் அது திருப்பியிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஜெனிவா கூட்டத்தொடரை நோக்கிச் செல்லும் இந்நாட்களில் இவ்வாறான கவனக்குவிப்பும் நொதிப்பும் முக்கியமானவை.தமிழகமும் உட்பட ஐரோப்பிய மற்றும் அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் அரசியற் செயற்பாட்டார்களின் அது கவனத்தை ஈர்த்திருகிறது. இது நாலாவது நன்மை.


இதைவிட மேலும் ஒரு நன்மை உண்டு. அது என்னவெனில் உடைக்கப்பட்ட சின்னம் கலைச் சிறப்புடையது அல்ல. அது கலைநயம் அற்றது. அவசர கோலத்தில் உருவாக்கப்பட்டது. உலகில் உள்ள இதுபோன்ற சின்னங்களோடு ஒப்பிடுகையில் நவீனத்துவமற்றது. அது தமிழ் மக்களின் கலைச் சிறப்பை வெளிக்காட்டவில்லை.பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்தவில்லை. அந்தச் சின்னம் மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் முற்றவெளியில் கட்டப்பட்டிருக்கும் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை சின்னமும் நவீனமானது அல்ல. முள்ளுக் கம்பி வேலிக்கு நிறுத்தப்படும் சிமெந்துத் தூண்களை வட்டமாக வைத்து கட்டியது போன்ற ஒரு சின்னம். அதுவும் கலைத்திறன் அற்றது.நவீனத்துவமற்றது.அப்படித்தான் முள்ளிவாய்க்காலில் நிறுவப்பட்டிருக்கும் நினைவுச்சின்னமும். தமிழ்மக்கள் இனப்படுகொலையின் கூட்டுக் காயங்களையும் கூட்டு மனவடுக்களையும் கூட்டு அவமானத்தையும் கூட்டுத் தோல்வியையும் கலைச்செழிப்போடு வெளிப்படுத்துவதில் உலகம் வியக்கும் வெற்றிகளைப் பெறவில்லை என்பதனை இந்தச் சின்னங்கள் காட்டுகின்றன.இதில் யாழ் பல்கலைக் கழகத்தில் உள்ள போரில் கொல்லப்பட்டவர்களுகான நினைவுச் சின்னம் ஒப்பீட்டளவில் கலைத்திறனுடையது.


எனவே இனிமேலாவது புதிய சின்னங்களை உருவாக்கும் பொழுது உலகத் தரத்தையும் பண்பாட்டு செழிப்பையும் ஒருங்கிணைக்கும் விதத்தில் படைப்புத் திறனோடு சிந்திக்க வேண்டும்.இதுவிடயத்தில் துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் ஆலோசனை கேட்கலாம்.நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கக்கூடிய நவீன சிற்பிகளை அணுகலாம்.இப்படிப் பார்த்தால் புதிய சின்னங்களை உருவாக்கும் பொழுது அவை நவீனமானவையாகவும் கலைநயம் மிக்கவையாகவும் இருப்பது அவசியம்.யாழ் பல்கலைக் கழகத்தில் நுண்கலைத் துறை உண்டு.சித்திரமும் வடிவமைப்பும் துறை உண்டு. இத்துறைசார் நிபுணத்துவத்தை ஏன் மாணவர்கள் பெற்றுக் கொள்ளக் கூடாது? தமிழ் அரசியலில் அறிவும் செயலும் பொருத்தமான விதங்களில் ஒன்று மற்றதை இட்டு நிரப்பவில்லை. நினைவுச் சின்னங்களின் விடயத்திலும் அதுதான் நிலைமையா?


ஆனால் இது விடயத்தில் மாணவர்கள் வேறு விதமாக சிந்திப்பதாகத் தெரிகிறது.இடிக்கப்பட்ட சின்னத்தை அப்படியே மீளக்கட்ட வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். நிர்வாகத்துக்கு எதிரான தமது போராட்டத்தின் வெற்றியை அது காட்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.எனினும் இது தொடர்பில் பழைய சின்னத்தையும் உள்வாங்கி ஒரு புதிய சின்னத்தை எப்படி உருவாக்கலாம் என்று துறைசார் ஞானமுடையவர்கள் சிந்திக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் ஒரு புதிய நவீனமான நினைவுச் சின்னத்தை குறித்து சிந்திக்க வேண்டிய வாய்ப்புக்களை ஏற்படுத்தியமை என்பது ஒரு ஐந்தாவது நன்மை எனலாம்.


எனவே தொகுத்துப்பார்த்தால் யாழ் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டமை என்பது தமிழ்அரசியலில் நன்மையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.


சின்னங்களும் சிலைகளும் உடைக்கப்படுவது தமிழ் அரசியலில் புதியதல்ல. கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழ்மக்கள் நிறுவிய சின்னங்களையும் சிலைகளையும் தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசாங்கங்கள் உடைத்திருக்கின்றன. தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுச்சின்னம் இதுவரை மூன்று தடவைகள் உடைக்கப்பட்டிருக்கிறது. அதுபோலவே தியாகி சிவகுமாரன் சிலையும் உடைக்கப்பட்டது. இவை மட்டுமல்ல யாழ் நகரப்பகுதி தாக்கப்படும் பொழுது அங்கே நிறுவப்பட்டிருந்த வள்ளுவர் அவ்வையார் சிலைகளும் கூட உடைக்கப்பட்டிருக்கின்றன.


எனவே சிலைகளை; நினைவுச் சின்னங்களை உடைப்பது என்பது இலங்கைத் தீவின் அரசியல் வரலாற்றில் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக காணப்படுகிறது.அதேசமயம் உடைக்கப்பட்ட சின்னங்களையும் சிலைகளையும் மீளக் கட்டியெழுப்புவது என்பது அதற்கெதிரான தமிழ் மக்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் காணப்படுகிறது.சின்னங்களையும் சிலைகளையும் இடித்தழிப்பதன் மூலம் அவர்கள் நினைவுகளை அழிக்கப் பார்க்கிறார்கள்.ஆனால் அவர்கள் எதை அழிக்க நினைக்கிறார்களோ அது அழிக்கப்பட முடியாத ஒன்றாக விசுவரூபம் எடுக்கிறது.என்பதற்கு முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் ஒரு சமீபத்திய உதாரணம் ஆகும்.


உடைக்கப்பட்ட சின்னம் கலைச் செழிப்புடையது இல்லைத்தான். ஆனால் அது இப்பொழுது உலகப் பிரபல்யம் அடைந்து விட்டது என்று ஒரு கத்தோலிக்க மதகுரு சொன்னார்.அந்த சின்னத்தின் கலைநயம் இன்மைக்கும் அப்பால் அதற்கு இப்பொழுது ஓர் உலகக் கவர்ச்சி கிடைத்துவிட்டது.எதை அவர்கள் தமிழ் மக்களின் நினைவில் இருந்து அழிக்க முற்பட்டார்களோ அது முன்னரை விட ஆழமாக பரவலாக மேலெழுந்துவிட்டது என்றும் மேற்சொன்ன மதகுரு சொன்னார். கலை இலக்கியச் செயற்பாட்டாளரும் புலமைமையாளரும் யாழ்.பல்கலைகழக நுண்கலைத்துறை சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி.த.சனாதனன் பின்வருமாறு சொன்னார்….”நினைவு கூர்தல் பொறுத்து தமிழ் மக்கள் சின்னங்களைக் கடந்துவிட்டார்கள். முள்ளிவாய்க்கால் நினைவு என்பதனை தமிழ் மக்கள் கஞ்சிவரை கொண்டு போய் விட்டார்கள். முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படுவது அழிக்கப்பட முடியாத ஒரு நினைவுகூர்தற் பயில்வு” என்று. முள்ளிவாய்கால் நினைவுக் கஞ்சியை தமிழ் சவில் சமூக அமையம் அறிமுகப்படுத்தியது. தமிழ் மக்கள் தமது வீட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிக் குடிப்பதை யாராலும் தடுக்க முடியாது.உணவையே ஒரு நினைவாக பயன்படுத்துவது.மேற்சொன்ன கத்தோலிக்க மதகுருவின் வார்த்தைகளில் சொன்னால் “உணவை ஒரு ஆயுதமாக பயன்படுத்திய ஒரு போரில் உணவையே ஒரு நினைவுப் பொருளாக பயன்படுத்துவது”…..எனவே முள்ளிவாய்க்கால் கஞ்சி வரையிலும் போன ஒரு மக்கள் கூட்டத்தின் நினைவுகளை அழிப்பது கடினம் என்று சனாதனன் சொன்னார். உண்மைதான்.


இந்த இடத்தில் வேறு ஒரு உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். யாழ் நூலகத்தை எரித்ததும் ஒரு இனப்படுகொலைச் செயல்தான். அது ஒரு பண்பாட்டு இனப்படுகொலை.ஆனால் நூலகம் எரிக்கப்பட்டதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களில் அடிப்படையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட முடியாத ஒரு நூலகத்தை எண்ணிம வடிவத்தில் கட்டியெழுப்பி விட்டார்கள். அதுதான் நூலகம்.கொம். அந்த இணையத்தளத்தில் தமிழ் நூல்கள் எண்ணிம வடிவத்தில் ஆவணங்களாகச் சேகரிக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை கடந்த வாரமளவில் தொண்ணூற்றி எழாயிரத்தை எட்டி விட்டதாக நூலகம் இணையத்தளத்தின் நிறுவுனர்களில் ஒருவரான சசீவன் கூறினார். இந்த எண்ணிக்கை யாழ் நூலகம் எரிக்கப்படும் பொழுது அங்கிருந்த மொத்த தமிழ் மற்றும் ஆங்கில நூல்களின் எண்ணிக்கை என்றும் அவர் கூறினார். ஆனால் நூலகம் டொட் கொம் இல் இருப்பவை முழுக்க முழுக்க ஈழத்தமிழ் நூல்ககளே.


தீயினால் அழிக்கப்பட முடியாத ஒரு நூலகத்தை தமிழ் மக்கள் இப்பொழுது பெற்றிருக்கிறார்கள். இதைப்போலவே சிலைகளை உடைக்கும் ஓர் அரசியல் பாரம்பரியத்தில் அழிக்கப்பட முடியாத உடைக்கப்பட முடியாத நினைவுகூரும் முறைமைகளை தமிழ் மக்கள் கண்டுபிடிக்கவேண்டும். ஒருபுறம் உடைக்கப்பட்ட சின்னங்களுக்கும் சிலைகளுக்கும் பதிலாக புதிய சின்னங்களை நிறுவும் போராட்டத்தை முன்னெடுக்கும் அதேசமயம் இன்னொருபுறம் நினைவுகளை எப்படி அழிக்கப்படமுடியாத விதத்தில் பேணலாம்; தலைமுறைகள் தோறும் கடத்தலாம் என்றும் தமிழ்த் தரப்பு சிந்திக்க வேண்டும்.


முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்ட பின்னணியில் வைத்து இது குறித்து மேலும் ஆழமாக சிந்திக்க வேண்டும். அவர்கள் அழிக்கக்கூடிய சின்னங்களை விடவும் அழிக்க முடியாத நினைவு கூர்தலைக் உருவாக்குவதில்தான் தமிழ் மக்களின் நினைவு கூறும் பொறிமுறை மேலும் பலமானதாக மாறும். போர்த்துக்கீசியர்கள் ஒல்லாந்தர்கள் நாட்டை ஆக்கிரமித்த காலங்களில் சுதேசிகள் தமது மத நம்பிக்கைகளை எப்படி வீடுகளுக்குள் ரகசியமாகப் பேணினார்கள் என்பதனையும் சனாதனன் சுட்டிக்காட்டினார். உண்மை. நினைவுகூர்தலை மக்கள் மயப்படுத்துவது என்பதும் அதுதான்.


யாழ்ப்பாணத்தில் விரதம் இருப்பவர்கள் விரதம் முடித்து உணவருந்திய வாழை இலையை வேலிகளில் வீட்டுக் கூரைகளில் சுருட்டி வைக்கும் ஒரு வழமை முன்பு இருந்தது. கல்வீடுகளும் ஓட்டுக் கூரைகளும் வருவதற்கு முன்பு ஓலைக் கூரைகள் காணப்பட்ட காலகட்டங்களில் அது பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டது.இது அன்னியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காலகட்டங்களில் தமது மத அனுஷ்டானங்களை ரகசியமாகக் கடைப்பிடித்த மக்கள் பின்பற்றிய ஒரு நடைமுறை ஆகும்.வாழை இலைகளை வெளியில் ஏறிந்தால் கைது செய்யப்படலாம் அல்லது தண்டிக்கப்படலாம் என்ற பயம் காரணமாக உணவருந்திய இலைகளை சுருட்டி வேலிகளுக்குள் அல்லது கூரைகளுக்கு மறைத்து வைத்தார்கள். அன்னியர்களின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்த பின்னரும் அது ஒரு சடங்காக பேணப்பட்டது என்பதே பின்வந்த நடைமுறையாகும்.


எனவே அழிக்கப்பட முடியாத அல்லது தடுக்கப்பட முடியாத நினைவு கூர்தல் என்பது அது எவ்வளவுக்கு எவ்வளவு மக்கள் பயப்படுகிறது எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு பண்பாடாகப் பயிலப்படுகிறது என்பதில்தான் தங்கியிருக்கிறது.அதன்மூலம் நினைவுகளை தலைமுறைகள் தோறும் கடத்தப்படும்.ஒரு தேசத்தை நினைவுகளால் கோர்த்து கட்டுவதற்கு அது உதவும்.ஏனெனில் இனப்படுகொலையின் நினைவுகளை அழிப்பது என்பதும் இனப்படுகொலையின் ஒரு பகுதிதான்.எனவே இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவது என்பதும் அந்த நினைவுகள் எவ்வளவுக்கு எவ்வளவு பேணப்படுகின்றன மக்கள் மயப்படுத்தப்படுகின்றன தலைமுறைகள் தோறும் கடத்தப்படுகின்றன என்பதிலேயே தங்கியிருக்கிறது.




No comments:

Post a Comment

Post Bottom Ad