தற்போது அனைத்து தமிழ்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்தியாவை நோக்கி கோரிக்கை வைப்போம் என்ற கோதாவில் சிறிலங்கா பேரினவாத நிகழ்ச்சி நிரல் ஒன்று அமெரிக்கா இந்தியா நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாக தந்திரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
13வது சட்டதிருத்தத்தை அமுல்படுத்த கோருவது என்பது தமிழரசுக்கட்சியால் ஏற்றுக்கொள்ளப்படமுடியாது என சுமந்திரனது தரப்பு (காலைக்கதிர் உட்பட) சிலநாட்களாக குரல் எழுப்புவது போல நடித்தது. உண்மையில் அந்த தரப்பை வெளியே விட்டு இந்த ஒன்றிணைப்பு கூட்டம் நடைபெற்றதால் மட்டுமே அந்த சத்தம் வந்திருந்தது. தற்போது அந்த தரப்பும் ஒன்று சேர இனி வார்த்தை விளையாட்டுகளால் தமிழர்கள் - கனகச்சிதமாக - ஏமாற்றப்படுவார்கள்.
இந்த ஒன்றிணைவுக் கடிதம் இந்தியாவை நோக்கி என எழுதப்படுவது போல வெளியில் காட்டப்பட்டாலும் இந்தியா அமெரிக்கா விரும்புவதுபோல சிறிலங்கா சனாதிபதி கோத்தபாயவுக்கு இந்த கடிதம் அனுப்பப்படுவதே பிரதானமாக நடைபெறப்போகின்றது.
கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு தேர்தலின்போதும் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் இந்த கோரிக்கைகள் வைக்கப்படபோவதில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் சிவில் சமூக அமைப்புகளால் ஒழுங்குபடுத்தப்பட்ட எழுகதமிழ் பேரணிகளில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளோ அல்லது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடைபெற்ற பேரணிகளில் செய்யப்பட்ட பிரகடனங்களின் அடிப்படையிலோ இந்த கோரிக்கைகள் வைக்கப்படப்போவதில்லை.
அப்படியானால் இந்த கோரிக்கைகளினால் அடையப்போவது என்ன?
ஒன்றுமே முன்னே நடக்ககூடியவாறு தெரியாதபோது ஏதோ ஒன்றை முன்னே வைத்து நகருவோம் என இன்னொரு கருத்து சொல்லப்படலாம். மக்களின் தேவைகள் கோரிக்கைகள் வேறு. களயதார்த்தம் தெரியாமல் கருத்துக்கள் சொல்லமுடியாது என ஒரு சப்பைக்கட்டு கட்டப்படுகின்றது.
அப்படியான ஒரு நகர்வை செய்வது எனின் அதற்கான விஞ்ஞாபனத்தை மக்களிடம் முன்வைத்து அல்லவா தேர்தலை நின்றிருக்கவேண்டும்.
விடுதலைப்போராட்டத்திற்கு முற்பட்ட காலத்திலும் சரி போர்க்காலத்திலும் சரி கடந்த பத்து ஆண்டுகளிலும் சரி அரசியல் உரித்துக்களே தேர்தல்களிலும் மக்கள் பேரணிகளிலும் முன்வைக்கப்பட்டன.
ஆனால் இப்போது திடீர் மாற்றம் யாருக்காக?
No comments:
Post a Comment